குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020
கறவை மாடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள், அவற்றை வளர்ப்பதற்கு ஏற்ற இடம், தீவனம், தட்பவெட்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு உட்பட்ட, நலமும் உற்பத்தி வளமுமுள்ள மாடுகளை வாங்க வேண்டும்.
சிறந்த பசு, சுறுசுறுப்பாக, மினுமினுப்பாக, இழுத்து விட்டால் உடனே பழைய நிலைக்குச் செல்லும் தோலைக் கொண்டதாக இருக்கும். கண்கள் துறுதுறுவெனவும், மூக்கு அகலம் மற்றும் ஈரமிக்கதாகவும் இருக்கும்.
மாட்டைப் பக்கவாட்டில் பார்த்தால், நீள்வடிவ முக்கோணமாகவும், முதுகு வளையாமல் நேராகவும் இருக்கும். இரு பக்கமும் வயிறு சமமாக இருக்கும். கால்கள் வளையாமல் வலுவாக இருக்கும்.
பால்மடியானது பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி, வயிற்றின் முன்பாகம் வரை இருப்பது நல்ல உற்பத்திக்கு அடையாளம். மென்மையாக, பாலைக் கறந்ததும் வற்றிப் போவதாக மடி இருக்க வேண்டும்.
காம்புகள் பெரிதாகவோ சிறிதாகவோ இல்லாமல், சமமாக, சீரான இடைவெளியில், கைக்கு அடக்கமாக, முழங்காலுக்கு மேல் இருக்க வேண்டும்.
மடியில் ஓடும் இரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் இருக்க வேண்டும். இது, மாட்டுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருப்பதையும், சிறப்பாக பால் சுரக்கும் என்பதையும் காட்டுவதாகும். கறவை மாடுகளைச் சந்தையில் வாங்காமல், விவசாயிகளிடம் தான் வாங்க வேண்டும்.
சி.அலிமுதீன்,
இளநிலை நான்காமாண்டு, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-600007.
மரு.ச.பாவா பக்ருதீன், முதுநிலை ஆய்வு மாணவர், கால்நடை மருத்துவக் கல்லூரி,
லூதியானா, பஞ்சாப்-141001.
சந்தேகமா? கேளுங்கள்!