My page - topic 1, topic 2, topic 3

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018

சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய சினைப் பசுக்களுக்கான தீவனப் பராமரிப்பு முக்கியமானது. பொதுவாக, 45 நாட்களுக்குக் குறைவாகப் பால் வற்றுக்காலம் உள்ள பசுக்களில், மடியானது சரியான அளவு சுருங்கி மீண்டும் வளர்ச்சிப் பெறாது. அதனால், அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும்.

அறுபது நாட்கள் பாலை வற்றச் செய்வதன் நோக்கம் என்னவெனில், சினைக்காலம் முடிந்து அடுத்த கறவை சமயத்தில் மாடுகள் அதிகமான பாலை நீண்ட நாட்களுக்குக் கொடுத்து, வற்றுக் காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சமன் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்.

பாலை வற்றச் செய்யும் முறைகள்

பால் கறப்பதை முற்றிலும் ஒரேநாளில் நிறுத்தி விடுதல். மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்காமல் பாதியளவு கறந்து மீதியைக் கறக்காமல் விட்டு விடுதல். பால் கறப்பதைப் படிப்படியாக நிறுத்துதல்.

ஒரேநாளில் பாலை நிறுத்துதல்

குறைந்தளவில் பாலைக் கறக்கும் மாடுகளில் இந்த முறையைப் பின்பற்றலாம். ஒரே நாளில் முற்றிலுமாகக் கறவையை நிறுத்துவதால் மடியில் பால் தங்கி விடும். அது அழுத்தத்தை ஏற்படுத்தி மடியிலிருந்து பால் சுரப்பை நிறுத்தி விடும். அன்றாடம் 10 லிட்டருக்கு மேல் பாலைக் கொடுக்கும் மாடுகளில் இந்த முறையைப் பின்பற்றினால் மடிநோய் வர வாய்ப்புள்ளது.

பாதியளவுப் பாலைக் கறக்கும் முறை

இந்த முறையில் மடிவீக்க நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. பாலை முற்றிலும் கறக்காமல் பாதியை மட்டும் கறந்து விட்டு மீதியை மடியிலேயே விட்டுவிட வேண்டும்.

பால் கறப்பைப் படிப்படியாக நிறுத்துதல்

இந்த முறையில் பாலைக் கறப்பதையே ஒரு வேலையாக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கறக்க வேண்டும். இதைப் பின்பற்றினால் இரண்டு வாரங்களில் பால் கறப்பு முற்றிலுமாக நின்று விடும். இவ்வாறு கறவையை வற்றச் செய்து சினைப் பசுவிற்குக் கறவை ஓய்வு தர வேண்டும்.

செய்யக் கூடாதவை

பாலை வற்றச் செய்ய எக்காரணத்தைக் கொண்டும் மாட்டுக்கு வழங்கும் தீவனத்தையோ தண்ணீரையோ குறைத்தல் கூடாது. அவ்வாறு குறைத்தால் சினைமாட்டிற்குத் தேவையான அளவு சத்துகள் கிடைக்காது. இதனால் கன்று பலவீனமாகப் பிறக்க வாய்ப்புண்டு. மேலும், அடுத்த கறவையில் போதுமான அளவு பாலுற்பத்தியும் இருக்காது.

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்

வளரும் கருவுக்குத் தகுந்த ஊட்டச் சத்துகள் கிடைக்கும். கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும். மடி சரியான அளவில் சுருங்கி, அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும். தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கறவையிலிருந்து பால் வற்றும் நிலைக்குச் செல்வதால், பசுக்களின் உடல் நிலை இத்தருணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

பால் வற்றிய காலத்தில் மடிநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, பால் முழுவதும் வற்றிய பின்பு மடி முழுவதும் சுருங்கும் வரையில், மடியில் மாற்றம் ஏதும் தெரிகிறதா என்று கவனிக்க வேண்டும். மாற்றம் தெரிந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதுவரையில் கூறியுள்ள முறைகளைப் பின்பற்றிப் பாலை வற்றச் செய்து, சினையின் போதும். ஈனும் போதும் மாடுகளைப் பராமரிப்பதன் மூலம், பண்ணையில் வருவாய் இழப்பைத் தவிர்த்து இலாபத்தை அதிகரிக்கலாம்.


முனைவர் சு.பிரகாஷ்,

முனைவர் ம.செல்வராஜ், முனைவர் கா.ரவிக்குமார், முனைவர் ச.மனோகரன்,

முனைவர் கி.செந்தில்குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks